சர்வம் மாயா
"சர்வம் மாயா" explores love, loss & acceptance. It highlights unspoken words, faith vs. doubt, & finding solace in being seen, even in illusion.

இன்று (13/02/2026)
அழகான திரைப்படம். மனதில் ஓர் மெல்லிய உணர்வு இறுதி வரை இருந்தது. படம் முடிந்த பின்னரும் அது தொடர்கிறது.
படத்தின் இறுதியில் இரண்டு 'Yes' வருகிறது
- நிவின் மாயாவின் அம்மாவிடம் சொல்லும் 'Yes'
- மரணத்தறுவாயில் மாயாவின் தம்பி சொல்லும் 'Yes'
இரண்டும் வெவ்வேறு சூழல்கள், ஆனால் இரண்டிலும் ஒரே உணர்வு — விடுதலை.
மெல்லிய காற்றுடன் படம் முடியும் போது, மாயா தான் காதலித்தவனிடம் தன் காதலைச் சொல்லிய ஆறுதலும், தன் தாயிடம் காதலனைக் காட்டிய நிறைவும் பெற்றிருப்பாள். அது போலவே படம் பார்த்த நமக்கும் அந்த மனநிம்மதி கிடைக்கிறது.
(உண்மையில் மாயா நிவினை காதலித்தாள் — ஆவியாக வந்த பின்புதான், உயிருடன் இருக்கும் போது இல்லை.)
மீள் பார்வை பார்க்கக் கூடிய திரைப்படம். இந்த ஆண்டின் முதல் மனம் நிறைந்த படம்.
இந்தப் படம் நமக்குச் சொல்லும் உண்மைகள்:
1. சொல்லாமல் போகும் வார்த்தைகள்தான் வாழ்நாள் சுமை.
மாயா உயிருடன் இருக்கும்போது தன் காதலைச் சொல்ல முடியாமல் போகிறாள். தான் காதலிப்பவனை பெற்றோருக்குக் காட்ட வேண்டும் அவனிடம் காதல் சொல்ல வேண்டும் என்ற ஆசையோடு இறக்கிறாள். இது நம் வாழ்விலும் நடக்கிறது தான். "நாளை சொல்லலாம்" என்று நினைக்கிறோம், ஆனால் அந்த நாளை வராமலே போய்விடுகிறது. நேசிப்பவர்களிடம் நேசிக்கிறோம் என்று சொல்ல ஒரு நாளும் தாமதமில்லை.
2. நம்பிக்கையின்மை vs நம்பிக்கை தான் வாழ்க்கையின் நிரந்தர மோதல்.
பிரபேந்து ஒரு நாத்திகன், ஆனால் பூசாரிக் குடும்பத்தில் பிறந்தவன். கடவுளை நம்பாத ஒருவன் ஆவியைச் சந்திக்கும்போது என்ன நடக்கும்? இது ஒரு philosophical கேள்வி மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்விலும் நாம் நம்பிக்கையின்மைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடுகிறோம்.
கண்ணால் காணாததை மறுப்பது எளிது. ஆனால் உணர்வால் உணரும்போது? மறுக்க முடியாது.
3. Brain death என்பது ஒரு குடும்பத்தின் மிகக் கொடிய முடிவு
மாயாவின் தம்பி "Yes" என்று சொல்லும் அந்தக் காட்சி மிகவும் வலித்தது. உயிருடன் இருக்கும் ஒருவரின் உடலை "போகட்டும்" என்று சொல்வது எவ்வளவு கடினமான முடிவு என்பதை இந்தப் படம் மிக நுட்பமாகக் காட்டுகிறது.
4. அடக்கி வைக்கப்பட்ட துயரம்
பிரபேந்து தன் அம்மாவை இழந்த வலியை ஆழமாகப் புதைத்து வைத்திருக்கிறான். Delulu (மாயா) அவன் வாழ்வில் வரும்போது, அந்தப் புதைக்கப்பட்ட உணர்வுகள் மெல்ல வெளிவருகின்றன.
இது நம்மில் பலருக்கும் பொருந்தும். நாம் துயரத்தை எதிர்கொள்வதை விட, அதை மறைப்பதில் வல்லுநர்களாக இருக்கிறோம். ஆனால் குணமாவதற்கு முதலில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
5. "காணப்படுதல்" என்ற ஆறுதல்
படத்தின் தலைப்பே "சர்வம் மாயா". எல்லாம் மாயை என்று சொல்கிறது. ஆனால் படம் சொல்வது வேறு: இந்த மாயையான உலகில், யாரோ ஒருவர் நம்மைப் புரிந்துகொள்வது, நம் கதையைக் கேட்பது என்பது உள்ளதே அதுதான் உண்மையானது.
மாயா அமைதியாக மறைவது, பிரபேந்து அவளின் அம்மாவிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்துவது என இது "closure" என்ற ஒன்றின் அழகான சித்தரிப்பு.
இறுதியில் வரும் அந்த மெல்லிய காற்று, மாயா இருப்பதன் அடையாளம் என்று படம் சொல்கிறது. நம்மை விட்டுப் பிரிந்தவர்கள் திரும்ப வரமாட்டார்கள். ஆனால் அவர்களின் நினைவுகள் காற்றைப் போல நம்மைத் தொட்டுச் செல்லும்.
இந்த நேரத்தில் நான் இருவரை நினத்துப் பார்க்கிறேன். ஒருவன் என்னுடன் கற்ற நண்பன். இன்னொருவர் என் கூடப் பிறக்காத அண்ணாவைப் போலப் பழகியவர். இருவரும் இப்போது இல்லை ஆனால் அவர்களின் நினைவு என்றும் இருக்கும்.
🎬 மனம் நிறைந்த படம். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.